இந்திய எல்லையில் படை குவிப்பில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, இந்தியாவுடனான எல்லை நிலவரம் சீராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தை அடுத்து, இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் எல்லையில் படை குவிப்பிலும், ஆயுத குவிப்பிலும் சீனா ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சீன தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எல்லையில் நிலவரம் சீராக இருப்பதாகவும், எல்லை விவகாரங்கள் குறித்து இருநாடுகளும் அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு விவகாரத்தில் 3வது நாடான அமெரிக்கா கருத்து தெரிவிப்பதை தங்கள் நாடு உறுதியாக எதிர்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.