டெல் அவிவ் : இஸ்ரேலின் புதிய அரசு, நீதித் துறையைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவித்துள்ள கொள்கையை வாபஸ் பெற வலியுறுத்தி நடந்த பேரணியில், 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்று, பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில், புதிய அரசுக்கு எதிராக இங்கு போராட்டம் வெடித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தையும், நீதித் துறையையும் பலவீனப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கையை கண்டித்து, கடந்த சில நாட்களாக இங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதித்துறையை பலவீனப்படுத்தி, அதன் வாயிலாக சர்வாதிகார ஆட்சி நடத்த முயற்சிப்பதாக, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டெல் அவிவ் நகரின் மத்திய பகுதியில் நேற்று முன்தினம் இரவு திரண்ட 80 ஆயிரம் பேர், முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், குடைகளைப் பிடித்தபடி சென்ற அவர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இஸ்ரேலின் ஜனநாயகத்தைக் காக்க, உயிருள்ள வரை போராட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஜெருசேலம், ஹைபா உட்பட பல்வேறு நகரங்களிலும் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement