எடப்பாடி ஹேப்பி மொமண்ட்… யார் அந்த மாணவி? மேடைக்கு அழைத்த இளங்கோவன்!

சேலம் மாவட்டம் சிறுவாச்சூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர்
எடப்பாடி பழனிசாமி
கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக புதுப்பானையில் பச்சரிசி போட்டு பொங்கல் வைத்தார். அப்போது சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை, கெங்கவல்லி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து விழாவில்
இளங்கோவன்
வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறுவாச்சூர் பொங்கல் விழா

பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, தலைவாசல் பகுதியில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார். இந்த திட்டங்களை திமுக அரசு முடக்கி வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது தலைவாசல் கால்நடைப் பூங்கா. இதுபற்றி பேசுகையில், கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மிகவும் பிரம்மாண்டமாக வரப் போகிறது.

கால்நடைப் பூங்கா பணிகள்

இதன் கட்டுமானப் பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயம் குறித்து சட்டப்பேரவையிலும் குரல் கொடுத்தேன். கால்நடைப் பூங்காவை விரைந்து செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி கால்நடைப் பூங்காவிற்கு அருகில் தோல் தொழிற்சாலை வரப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் சேலம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்ட நிலத்தடி நீரும் மாசுபட்டு விடும்.

மேடை ஏறிய மாணவி

ஏனெனில் இது விவசாயிகளுக்கு பொன் விளைகிற பூமி. சிறிதும் மாசுபட்டு விடக் கூடாது. இதற்காக விவசாயிகளுக்காக என்றும் நான் துணை நிற்பேன் எனத் தெரிவித்தார். கடைசியாக மாட்டு பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையை முடித்து கொண்டார். இந்த சூழலில் திடீரென ஒரு மாணவி டாக்டர் கோட் போட்டுக் கொண்டு மேடை ஏறினார்.

மருத்துவக் கனவு

அவரை இளங்கோவன் அழைத்ததாக தெரிகிறது. அவர் கையில் மைக் கொடுத்து பேசு வைத்தனர். அந்த மாணவி பேசுகையில், ”அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் ஜெயரிணிதா. நான் ஊனத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறேன்.

எடப்பாடியாருக்கு நன்றி

அய்யா அவர்கள் ஏற்படுத்தி கொடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. தற்போது முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அய்யா அவர்களுக்கு அரசு மாணவ, மாணவிகள் சார்பில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” எனக் கூறினார்.

உடனே மகிழ்ச்சி வெள்ளத்தில் எடப்பாடி பழனிசாமி இரு கைகளால் நன்றி கூறினார். இதையடுத்து மகளிரணி சார்பில் அளிக்கப்பட்ட பொங்கலை சாப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். இறுதியாக மலர் கொத்து கொடுத்த அதிமுகவினர் பலரும் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்று சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.