என்னை கொல்ல மர்ம நபர்கள் முயற்சி : நடிகர் பாலா போலீசில் புகார்
தமிழ் சினிமாவில் அம்மா அப்பா செல்லம் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாலா. சிறுத்தை, வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சிவாவின் உடன் பிறந்த தம்பி தான் இவர். பல ஆண்டுகளாகவே மலையாள திரை உலகில் மட்டுமே கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். முதல் மனைவியுடன் விவாகரத்து, இரண்டாவது மனைவியுடன் பிரிவு, சம்பளம் தரவில்லை என நடிகர் உன்னி முகுந்தன் மீது குற்றம் சாட்டியது என தொடர்ந்து ஏதாவது சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார் பாலா.
இந்த நிலையில் தற்போது தன்னை கொல்ல மர்ம நபர்கள் முயற்சித்ததாக கூறி கேரள காவல்துறையில் புகார் அளித்துள்ளார் பாலா. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் கோட்டயம் சென்று இருந்ததாகவும் தன் மனைவி எலிசபெத் மட்டுமே வீட்டில் இருந்த சமயத்தில் அவரை கத்தியை காட்டி இரண்டு மர்ம நபர்கள் மிரட்டியதாகவும் அதுமட்டுமல்ல பக்கத்து வீடுகளிலும் சென்று அவர்கள் கதவைத் தட்டி அச்சுறுத்தி விட்டு சென்றுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார் பாலா. அந்த மர்ம நபர்கள் உருவம் அடங்கியிருக்கும் சிசிடிவி காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
“அப்படி வந்த அந்த இரண்டு நபர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் என் மனைவியும் காலையில் வாக்கிங் சென்றபோது திடீரென எனது மனைவியின் காலில் விழுந்து வணங்கியவர்கள் தான்.. அவர்களை இதற்கு முன் நான் பார்த்ததே கிடையாது அதன்பிறகு மறுநாள் அவர்கள் எங்கள் வீட்டு பகுதியிலேயே சுற்றி உள்ளார்கள். அடுத்த நாள் இரவு எங்கள் வீட்டிற்கு வந்து கதவை தட்டி உள்ளார்கள். அவர்கள் என்னை கொள்வதற்காகத்தான் கொட்டேஷன் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. அப்படி அனுப்பியவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.. வெறும் இரண்டு பேரை அனுப்ப வேண்டாம்.. ஒரு முப்பது நாற்பது பேரையாவது அனுப்புங்கள்.. அந்த அளவுக்கு நான் ஆண்மையுள்ள ஆள்தான் என்று கூறியுள்ளார் பாலா.
மேலும் வந்திருந்த அந்த நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார்கள் என்று கூறியுள்ள பாலா, சில தினங்களுக்கு முன் தானும் தனது மனைவி டாக்டர் எலிசபெத்தும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு போதைப்பொருளுக்கு எதிராக பேசியதையும் குறிப்பிட்டார். அதனால் கூட தன் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்து இருக்கலாம் என்றும் கூறியுள்ளார் பாலா.