மக்கள் மத்தியில் எவ்வளவு தான் நற்பெயர் பெற்று வைத்திருந்தாலும், கடைசியில் வாங்கு வங்கி அரசியல் தான் கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசியல் களம்
திமுக
, அதிமுக என இருபெரும் திராவிட கட்சிகளின் மோதலாகவே 46 ஆண்டுகளை கடந்து வந்துள்ளது. இதில் தனக்கான வாக்கு வங்கியை தக்க வைப்பதுடன், எதிர்க்கட்சியின் வாக்கு வங்கியை கைப்பற்றுவதும் சுவாரஸியமூட்டும் வியூகம்.
முதல் பெரிய தேர்தல்
தற்போது முதல்வராக பதவி வகித்து வரும்
மு.க.ஸ்டாலின்
, அடுத்தகட்டமாக 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார். கருணாநிதி இல்லாத முதல் பெரிய தேர்தலை 2019ல் ஸ்டாலின் எதிர்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 38ஐ கைப்பற்றி அசத்தியது திமுக. அதன்பிறகு சட்டப்பேரவை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து வெற்றி வாகை சூடிவிட்டார்.
2024 மக்களவை தேர்தல்
இந்த சூழலில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும், அதன் தொடர்ச்சியாக 2024 மக்களவை தேர்தலையும் எதிர்கொள்கிறார். இம்முறை களம் வேறு மாதிரியாக இருக்கிறது. பாஜகவின் எழுச்சி, அதன் சித்தாந்த மோதல், மத்திய அரசு பல்வேறு வகைகளில் தொடுக்கும் மாநில உரிமை சார்ந்த பிரச்சினைகள் என அரசியல் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
சிக்கலில் அதிமுக
அதுமட்டுமின்றி பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுகவை, அதன் உட்கட்சி பூசலை வைத்து கபளீகரம் செய்து திமுகவிற்கு சரிக்கு சமமாக அமரப் பார்க்கிறது பாஜக. எனவே திமுக விழித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்நிலையில் தான் அதிமுக ஆதரவாளர்களை தங்கள் வசம் திருப்பிவிட்டால் அதன்பிறகு பாஜகவிற்கு வேலையே இருக்காது என திமுக தரப்பு கணக்கு போடத் தொடங்கியுள்ளது.
ராமாவரம் பிளான்
இதன் ஒருபகுதியாக ஜனவரி 17 எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் தனது குடும்பத்துடன் ராமாவரம் இல்லத்திற்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் தீவிர ஆலோசனையில் இருப்பதால் கடைசி நேரத்தில் தான் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லத்திற்கு ஸ்டாலின் சென்றால், அதுதான் தமிழ்நாடு அரசியலில் ஹைலைட்டான விஷயமாக இருக்கும்.
எம்.ஜி.ஆருக்கு கவுரவம்
உடனே அதிமுக சண்டைக்கு வர, பாஜக விமர்சனங்களை முன்வைக்க ஸ்டாலினின் இமேஜ் அடுத்தகட்டத்திற்கு செல்லும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். எம்.ஜி.ஆரை கவுரவிக்கும் செயல்பாடுகள் கடந்த ஆண்டு 17.01.2022 அன்றே தொடங்கியதை பார்க்க முடிந்தது. அப்போது டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
திமுகவின் செல்வாக்கு
இதையடுத்து 01.12.2022 அன்று ஜானகி எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இதன் அடுத்தகட்டமாக தான் ராமாவரம் பிளான் எனத் தெரிகிறது. இதன்மூலம் திமுகவின் செல்வாக்கு மேலும் உயரும். தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஸ்டாலின் ஆழமாக பதிவார் என்று உடன்பிறப்புகள் உற்சாகம் தெரிவிக்கின்றனர்.