கரூர் மாவட்டத்தில் பழைய இரும்பு குடோனில் பதுக்கிய ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டியன். இவர் அதே பகுதியில் வைத்துள்ள பழைய இரும்பு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குளித்தலை போலீசார் குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 590 கிலோ எடை கொண்ட 21 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் உரிமையாளர் செல்லபாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளும், கைது செய்யப்பட்ட செல்லபாண்டியனையையும் சின்னதாதமபாளையத்தில் உள்ள வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து செல்லப்பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்ட வனச்சரக அலுவலர்கள், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.