அகமதாபாத்: தமிழகத்தில் 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தானில் மகரசங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது.குஜராத்தில் உத்ராயண் என்ற பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகின்றது. இதனை பட்டம் விடும் திருவிழா என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் குஜராத் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கமாகும். நேற்று முன்தினம் வார இறுதி நாள் என்பதால் தங்களது வீட்டின் மாடிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பட்டம் விட்டு மகிழ்ந்தனர். இந்த திருவிழாவின்போது பட்டம் விடுவதற்கு பயன்படுத்தப்படும் மாஞ்சாநூல் கழுத்தறுத்து 6 பேர் இறந்ததாக போலீசார் நேற்று தெரிவித்தனர். மேலும் பட்டம் விடும்போது கீழே விழுந்தும், மாஞ்சா நூல் அறுத்தது காரணமாகவும் 175 பேர் காயமடைந்துள்ளனர்.