கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான கொடைக்கானலில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க தனித்தனியாக நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. மோயர் பாயிண்ட் பகுதியை பார்க்க பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5, குணா குகையை பார்க்க பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, தூண் பாறையை பார்க்க பெரியவர்களுக்கு ரூ.5 என நுழைவுக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. பைன் மரக்காடுகள் பகுதிக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
இந்நிலையில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு சுற்றுலா இடங்களுக்கும் பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15 என வனத்துறை ஒரே நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. ஒரே கட்டண நிர்ணயத்தை எதிர்த்தும் குறைக்கவும் பலர் வலியுறுத்தியுள்ளனர். சுற்றுலா டாக்சி, வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்களுடன் வனத்துறை கலந்து ஆலோசிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, நுழைவுக் கட்டணத்தை குறைத்து, கூடுதல் கவுன்டர்களை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.