சர்வதேச வாள் சண்டை போட்டிக்குத் தேர்வான அரசுப்பள்ளி மாணவி – குவியும் பாராட்டு!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் சர்வதேச அளவில் நடைபெறும் வாள் சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் அனைவரும் தற்காப்பு கலை ஒன்றை கற்றுக் கொண்டால் அவர்களுக்கு ஆபத்து வரும் போது யாருடைய உதவியும் இல்லாமல் தாங்களே தற்காத்து கொண்டு பாதுகாப்பாக வாழலாம் என கூறும் மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சர்வதேச வாள் சண்டை போட்டிக்கு தேர்வான லக்‌ஷனா தேவி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம், தினக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமு. கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி லெட்சுமி. இவர்களின் மகள் லக்‌ஷ்னாதேவி அணைக்கரையில் உள்ள அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட லக்‌ஷனாதேவி சிலம்பம், யோகா, வாள் சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்று வருகிறார்.

குறிப்பாக வாள் சண்டையில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாள்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்பட மூன்று பதக்கங்களை பெற்று சர்வேத அளவில் நடைபெறும் வாள் சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பலரும் லக்‌ஷ்னாதேவியை பாராட்டி வருகின்றனர்.

வாள் சண்டை போட்டியில் வென்ற லக்‌ஷனாதேவி

இது குறித்து லக்‌ஷனாதேவியிடம் பேசினோம். “சிறு வயசிலிருந்தே எனக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் அதிகம். பள்ளி அளவில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். இதைப் பார்த்த என் பெற்றோர் என்னை யோகா, சிலம்பம் வகுப்புகளில் சேர்த்து விட்டனர். எனக்கு சிலம்பம் பயிற்சி அளித்த மாஸ்டர் செல்வம் என்னைப் பல போட்டிகளில் கலந்துகொள்ள வைத்தார்.

மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்றேன். அதன் பிறகு என் கவனம் வாள் சண்டை பக்கம் திரும்பியது. மாஸ்டர் செல்வம் சொல்லி கொடுத்ததை எடுத்த எடுப்பிலேயே செய்ய ஆரம்பித்தேன். நடனம் ஆடிக்கொண்டே வாள் சண்டை போடுதல், அடிமுறை போன்ற வகைகளை கற்றுக்கொண்டேன். வாள் சண்டையின் நுணுக்கங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்த பிறகு போட்டிகளில் கலந்து கொண்டேன்.

அரசுப்பள்ளி மாணவி லக்‌ஷனாதேவி

கும்பகோணத்தில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றேன். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதில் தமிழகம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 80 பேர் பங்கு பெற்றனர். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நானும், இன்னொரு மாணவியும் கலந்து கொண்டோம்.

அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ஒரு தங்கப்பதக்கம், இரண்டு வெண்கலப் பதக்கம் பெற்றேன். எல்லோரும் எனக்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்ததை மறக்கவே முடியாது. ஜம்மு காஷ்மீர் போட்டியில் வென்றதன் மூலம் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நிச்சயம் அதிலும் வெற்றி பெறுவேன். அதற்காக இப்போதிலிருந்தே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

அரியலூர் மாணவி லக்‌ஷனாதேவி

மாதம் பயிற்சி கட்டணம், போட்டிகளில் கலந்து கொள்ள பல ஊர்களுக்கு அழைத்துச் செல்வதற்கு ஆகும் செலவு என பொருளாதார சிக்கல் இருந்தாலும் அதையெல்லாம் மீறி என் பெற்றோர் என் கனவு நிஜமாவதற்கு முதுகெலும்பாக இருந்து கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் கொடுக்கின்ற ஊக்கமே நான் போட்டியில் வெல்வதற்கு முதல் காரணம்.

எதிர்காலத்தில் ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பதே என் லட்சியம். பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அவசியம் ஒரு தற்காப்பு கலையாவது கற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்கான பிரச்னைகள் அதிகரித்திருக்கக்கூடிய சூழலில் தற்காப்பு கலை தெரிந்திருந்தால் அதிலிருந்து எளிதாக யாருடைய உதவியும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஐ.பி.எஸ் ஆன பிறகு பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே என் கனவு, லட்சியம். அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.