சிக்கலில் தலைவாசல் கால்நடை பூங்கா: அரசுக்கு எடப்பாடி விடுத்த வார்னிங்!

சேலம் மாவட்டம் சிறுவாச்சூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர்
எடப்பாடி பழனிசாமி
கலந்து கொண்டார். இந்த விழாவில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர்
இளங்கோவன்
வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, உலகில் எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன. இவை எதுவுமே மக்களுக்கு உணவளிப்பது இல்லை. விவசாய தொழில் ஒன்று தான் உணவளிக்கிறது. தை பிறந்து விட்டது. அதிமுகவிற்கு வழி பிறந்து விட்டது.

சிறுவாச்சூர் பொங்கல் விழா

சிறுவாச்சூரில் உள்ள எலந்தவாரி ஏரிக்கு 50 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் ஒன்று அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக செயல்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்தின் மூலம் சிறுவாச்சூர், வேப்பநத்தம், பட்டுத்துறை, வரகூர், ஊனத்தூர், மணிவிழுந்தான் காலனி, நாவக்குறிச்சி, புத்தூர் என 8 கிராம விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறுவர்.

அதிமுக அரசின் திட்டங்கள்

இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். இதேபோல் குடிமராமத்து திட்டம், பயிர் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்டவையும் அமல்படுத்தப்பட்டன. கெங்கவல்லி பகுதியில் தடுப்பணைகளும் கட்டி தரப்பட்டன. மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயத்தில் நஷ்டத்தில் தவித்த போது 150 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கி என்னுடைய ஆட்சி காலத்தில் உத்தரவிட்டேன்.

பொங்கல் பரிசு

ஆனால் தற்போதைய அரசு பொங்கல் பரிசில் கூட தரமற்ற பொருட்களை வழங்குகிறது. அதுவே அதிமுக ஆட்சியில் கொரோனாவில் தவித்து வந்த மக்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுத் தொகுப்பை வழங்கி நடவடிக்கை எடுத்தேன். நடப்பாண்டு கரும்பு கூட விவசாயிகள் போராட்டம் மற்றும் நமது அறிக்கையின் வாயிலாக தான் கிடைத்தது. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் அரசு என்று கூறி வருகிறீர்கள்.

வரி உயர்வு

இந்த ஆட்சியில் விவசாயிகள் என்ன நன்மைகள் பெற்றார்கள்? தினந்தோறும் பத்திரிகை செய்தி, ஊடகச் செய்தி. விளம்பரம் தான் மிச்சம். இதற்காகவே நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை செலவழித்து வருகிறார்கள். மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மின்சார வரி, வீட்டு வரி என அனைத்து வரியையும் உயர்த்தி விட்டனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா தலைவாசல் பகுதியில் உருவாக்கி இருக்கிறோம்.

கால்நடைப் பூங்கா

வருங்காலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக மாறப் போகிறது. இந்த ’தலைவாசல்’ என்ற பெயர் உலகம் முழுவதும் பேசக்கூடிய ஊராக மாறும். ஆனால் பணிகளை அப்படியே முடக்கி போட்டுள்ளனர். இதுபற்றி சட்டப்பேரவையிலும் எடுத்துரைத்தேன். அதுமட்டுமின்றி கால்நடைப் பூங்காவிற்கு அருகில் தோல் தொழிற்சாலை கொண்டு வரப்பட உள்ளதாக பரவலாக செய்திகள் வருகின்றன. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தோல் தொழிற்சாலை

இதன்மூலம் நீரின் தரம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டு விடும். இப்படியொரு திட்டத்தை அரசு வைத்திருந்தால் அதை அப்படியே கைவிட்டு விட வேண்டும். இதற்காக விவசாயிகள் உடன் கைகோர்த்து நானும் நிற்பேன். பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய், நூறு நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது, சிலிண்டர் மானியம் என தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே திமுக அரசு நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.