தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லங்கரை கிராமத்தில் தமிழ் திருமுறைகளான தேவாரம், திருவாசகம் நூல்களுக்கு வீடுகள் தோறும் கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கொல்லங்கரை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத்திருநாளில் தேவாரம், திருவாசக நூல்களை ஊரில் உள்ள பெரியவர்கள் சிறுவர்களுக்கு கற்பிக்கும் நிகழ்வு தொடங்குகின்றனர். தினமும் மாலை நேரத்தில் சிறுவர்களுக்கு திருமுறை நூல்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மார்கழி மாதம் பிறந்ததும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொல்லங்கரை கிராமத்தில் மேலத்தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, தெற்கு தெரு வழியாக திருமுறை நூல்களை பாடி வருகின்றனர்.
பின்னர் தை மாதம் பிறந்ததும், தை முதல்நாளான பொங்கல் தினத்தன்று அந்த கிராம மக்கள் திருமுறைகளை பாடி வந்தவர்களையும், திருமுறைகளையும் கவுரவிக்கும் விதமாக வீடுகள் தோறும் வரவழைத்து அவர்களுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வழங்கியும், திருமுறைகளுக்கு தீப ஆரத்தி எடுத்தும் வருகின்றனர்.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த த.செந்தில்குமார் கூறுகையில், “எங்களது கிராமத்தில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தைமுதல் நாளில் திருமுறைகளை பாடி வருபவர்களையும், திருமுறை நூல்களை கவுரவிக்கும் நிகழ்வு வீடுகள் தோறும் நடைபெறுகிறது.
எங்களது கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் முன்பு 30க்கும் மேற்பட்ட திருமுறைகளை பாடும் ஓதுவார்கள் இருந்தனர்.
நெல்லுப்பட்டு நமச்சிவாய சுவாமிகள் வழிகாட்டுதலில் எங்களது கிராமத்திலிருந்து திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவுக்கு சென்று திருமுறைகளை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது தமிழ் திருமுறைகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும், திருமுறைநூல்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சிறுவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. சிறுவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். மார்கழி மாதம் முழுவதும் கிராம தெருக்களில் திருமுறைகளை பாடி சென்றவர்களுக்கு, தை முதல் நாளான நேற்று 30 க்கும் மேற்பட்ட திருமுறைகளை பாடிச் சென்றவர்களை வீடுகளில் உள்ளவர்கள் தங்களது வீடுகளுக்கு வரவழைத்து அவர்களை கவுரவித்தனர். இந்த நிகழ்வில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பங்கேற்றனர” என்றார்.