நீண்ட தூரம் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிவது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந் தொற்றானது பல வகைகளாக உருமாறி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
அமெரிக்காவில், கடந்த 7 ஆம் திகதி வரையிலான அறிக்கையின்படி, 27.6 சதவீதம் மக்கள் கொரோனாவின் எக்ஸ்.பி.பி.1.5 என்ற உருமாறிய அதிதீவிர பரவல் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சூழலில், கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வரக்கூடிய எந்தவொரு பயணியும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கான சிரேஷ்ட அவசரகால அதிகாரி கேத்தரீன் ஸ்மால்வுட் தெரிவிக்கையில், விமானத்தில் புறப்படும் முன் பயணிகளை பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும். வேற்றுமையின்றி பயண கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாடுகள் அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
27 அரசாங்கங்களை சேர்ந்த ஐரோப்பிய யூனியனின் அதிகாரிகள் அடங்கிய குழுவானது, சீனாவிலிருந்து வரும் விமான பயணிகள் சென்று சேரும் வரையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் பரிந்துரைத்துள்ளது.
இதற்கமைய கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வரக்கூடிய மற்றும் நீண்ட தூர விமான பயணம் மேற்கொள்ளும் எந்தவொரு பயணியும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.