நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோயிலின் பூசாரியான சிதம்பரம் என்பவர் கோயில் விவகாரம் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையின் சாட்சிகளுக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் சிதம்பரத்தின் உறவினரான மாயாண்டி என்பவரை கடந்த நவம்பரில் அதே கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
கோயில் விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களால் பதற்றம் நீடித்த நிலையில், கொலையானவரின் சமூகத்தைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் நவம்பர் 22-ம் தேதி கொலை செய்யப்பட்டார். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் நெல்லை மாவட்டத்தில் பதற்றம் நீடித்தது.
இந்த நிலையில் ஏற்கெனவே சாதிய பிரச்னை நீடித்த கோபாலசமுத்திரம் கிராமத்தில் மீண்டும் கொலை நடந்ததால் பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது. மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன். என்பவரை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது. கோயில் பணிகளில் அதிக அக்கறை காட்டிவந்த 55 வயதான கிருஷ்ணன், நேற்று வழக்கமான கோயில் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.
அப்போது கோயில் வளாகத்தில் ஒரு கும்பல் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். அதனால் அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி கிருஷ்ணன் எச்சரித்துள்ளார். அதில் அவர்க்ளுடன் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதுவே கைகலப்பாக மாறியதால் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். பின்னர் தங்களிடம் இருந்த அரிவாளை எடுத்து கிருஷ்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர்
கிருஷ்ணனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இது தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் விசாரணையில் கொம்பையா என்பவரும் அவரின் நண்பர்களும் அந்தப் பகுதியில் மதுக் குடித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. அதனால் கொம்பையா உள்ளிட்ட மூவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோயில் பணியாளரை மது போதையில் இருந்த கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.