புதுடெல்லி: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 72 பேரை ஏற்றிச் சென்ற விமானம் நேற்றுக் காலை பொகாராவில் விழுந்து நொறுங்கியது. இதில் 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேற்கு நேபாளத்தில் அமைந்துள்ள நகரின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும், ஏடிஆர் 72 விமானம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்டது. இதில் 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.33 மணிக்கு விமானம் புறப்பட்டது. பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பு ஓடுபாதையில் இருந்து விலகிய நிலையில் 11 மணியளவில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
இந்த விமானம் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக சேதி ஆற்றங்கரை அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு விபத்து ஏற்பட்டது. உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தீ பற்றி எரிவதாலும், அப்பகுதியில் கடும் புகை மண்டலமாக காணப்படுவதாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக மீட்பு படையினர் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் மீட்பு பணி படு தீவிரமாக நடைபெற்று வந்தது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட விமானத்தில் இருந்த 72 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், இறுதி தகவலின்படி, 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் யார் யார்? பணியாளர்கள் யார் யார் என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியாகிவில்லை. தகவலறிந்ததும், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தகால் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். மேலும் நேபாள அரசாங்கம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இறந்த பயணிகளில், 6 குழந்தைகள் உட்பட 15 வெளிநாட்டவர்கள் விமானத்தில் இருந்தனர். 53 நேபாளிகள், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், 2 கொரிய நாட்டினர், அர்ஜென்டினா மற்றும் அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் விமானத்தில் இருந்ததாக விமான நிறுவன அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘நேபாளத்தில் நடந்த சோகமான விமான விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு மிகவும் துரதிருஷ்டவசமானது’’ என்றார். விபத்து நடந்த பொக்காரா விமான நிலையம், 2 வாரம் முன்புதான் திறந்து வைக்கப்பட்டது. இந்த விமான நிலையம் சீன உதவியுடன் அமைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவுடன் கடந்த 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, சுமார் 1,755 கோடி நிதியுதவியுடன் அமைக்கப்பட்டதாக, காத்மாண்டுவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தகவல் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு, முன்னாள் சீன வெளியுறுவு அமைச்சர் வாங் இ, இந்த விமான நிலையத்தை நேபாள அரசிடம் ஒப்படைத்தார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.