ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றால் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு தான்.
அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் திருநாள் நேற்று தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் தமிழகத்தில் சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டித் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்று பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்றது.
முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்தில் உள்ள 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.
இதை தொடர்ந்து, காளைகள் அடுத்தடுத்து வாடிவாசலில் இருந்து துள்ளி வந்தன. அதனை பிடிப்பதற்கு மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் காலையில் இருந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது நிறைவடைந்தது.
இந்த விளையாட்டில் 23 காளைகளை பிடித்த வீரரான சின்னபட்டி தமிழரசன் முதல் பரிசை பிடித்து சாதனைப்படைத்துள்ளார். அவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது. இதையடுத்து,19 காளைகளை பிடித்த பாலமேடு மணி என்பவர் இரண்டாவது பரிசை வென்றார். மேலும், 15 காளைகளை பிடித்த பாலமேடு ராஜா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், நெல்லை பொன்னர் சுவாமி கோவில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு உரிமையாளருக்கு இருசக்கரவாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இதில், 35 பேர் காயமடைந்த நிலையில், 10 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த போட்டியில், 9 காளைகளை அடக்கிய பிரபல மாடுபிடி வீரர் அரவிந்த ராஜன் என்பவர் மாடு முட்டியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.