தஞ்சாவூர் பெரியகோயிலில், மகரசங்கராந்திப் பெருவிழா நடைபெற்றது. இதில் 2 டன் அளவிலான காய், பழங்கள் உள்ளிட்ட பொருள்களால் நந்தியம் பெருமானுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் பொங்கல் பண்டிகையான நேற்று மாலை, நந்தியம் பெருமானுக்குப் பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மாட்டுப் பொங்கல் தினமான இன்று அதிகாலையே பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பிறகு, காலை 9:00 மணி அளவில் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், நெல்லிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா உள்ளிட்ட பழங்கள், லட்டு, அதிரசம், எனப் பல வகையான பலகாரங்கள் மற்றும் பூக்கள் என 2 டன் எடை கொண்ட பொருள்களால் நந்தியம் பெருமானுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்புத் தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது ‘நந்தியம் பெருமானே…’ எனப் பொதுமக்கள் கோஷம் எழுப்பி வணங்கினர்.
இதையடுத்து நந்தியம்பெருமான் முன்பாக, 108 பசுக்களுக்குச் சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவித்துப் பட்டுத் துணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடத்தப்பட்டது. பிறகு, நந்தியம் பெருமானுக்குப் படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர். பக்தர்கள் வழங்கிய காய், பழம், பலகாரம் ஆகியவற்றில் நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரியகோயிலின் அடையாளங்களில் ஒன்றான நந்தியம் பெருமானுக்கு நடத்தப்பட்ட மஹா சங்கராந்தி மற்றும் கோ பூஜையில் கலந்து கொண்டது பரவசத்தைத் தந்ததாகப் பக்தர்கள் தெரிவித்தனர்.