சென்னை அடுத்த தாம்பரம் அருகே கடப்பேரி திருநீர்மலை சாலையில் இயங்கி வரும் நடராஜன் பெண்கள் விடுதியில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் ஜார்கண்ட் பாளையத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி என்ற பெண் தனது பெற்றோரிடம் பேசுவதற்காக 3வது மாடிக்குச் சென்றுள்ளார்.
அப்பொழுது மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த அவர் மீது துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 110 கி.வாட் உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து கதிர்வீச்சு செல்போனை தாக்கியதில் அப்பெண் தீ பற்றி எரிந்துள்ளார்.
இந்த விபத்தில் அப்பெண்ணுக்கு 70% தீக்காயம் ஏற்பட்டது. அதே போன்று கீழ்த்தளத்தில் உள்ள அறையில் இரண்டு பெண்கள் செல்போனை சார்ஜ் போட்டவாறு பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் மின்சாரம் தாக்கியதில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த கும்கும் குமாரி முதலுதவி சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மேல் சிகிச்சை கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து விடுதியில் இருந்த அனைத்து பெண்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் பேசிய பொழுது இளம் பெண் தீ பற்றி எரிந்த சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.