ரஷிய ஏவுகணை தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல்

கீவ்,

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், மின்நிலையங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது.

அந்த வகையில் தற்போது ரஷிய படைகள் உக்ரைனின் பொதுஉள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகர் மீது மீண்டும் கவனம் போர் தொடங்கிய சமயத்தில் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக முயன்றன. ஆனால் உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பால் ரஷிய படைகள் அங்கிருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது கவனத்தை திருப்பிய ரஷிய படைகள் கடுமையான தாக்குதல்கள் மூலம் பல நகரங்களை ஆக்கிரமித்தன.

இந்த சூழலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரஷிய படைகள் மீண்டும் கீவ் நகர் மீது கவனத்தை குவித்தன. அங்கு ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை பயன்படுத்தி சரமாரியாக தாக்குதல்களை நடத்தின. இதனைத்தொடர்ந்து நேற்று முன் தினம் அதிகாலை கீவ் நகர் மீது ரஷிய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்கின. ரஷியாவின் ஏவுகணை மழையில் கீவ் நகரம் அதிர்ந்தது. இதில் 18 வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஏவுகணை தாக்குதலில் பல கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன.

இந்நிலையில் டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ரஷிய ஏவுகணை தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று நடந்த தாக்குதலில் குறைந்தது 73 பேர் காயமடைந்தனர், அவர்களில் 30 பேர் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர் என்று டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவரான வேலண்டின் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களில் குறைந்தது 12 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்த 39 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.