புதுடெல்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இவிஎம்) பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களை (ஆர்விஎம்) அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் ஆர்விஎம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 72 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஆர்விஎம் எந்த வகையிலும் இணையத்துடன் இணைக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதையடுத்து ஆர்விஎம் குறித்து செயல் விளக்கம் அளித்து கருத்துகளை கேட்பதற்காக 8 தேசிய கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 57 மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மாநாடு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மக்கள் ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநிலங்களவை சுயேச்சை எம்.பி. கபில் சிபலும் பங்கேற்றார். இக்கூட்டத்தின் முடிவில், தேர்தல் ஆணையம் கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்று ஆர்விஎம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பது எனவும் மீண்டும் எதிர்வரும் 25-ம் தேதி கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆர்விஎம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் செயல்விளக்கம் அளித்து ஆலோசனைகள் பெறும் பணியை தேர்தல் ஆணையம் நேற்று தொடங்கியது. இதில் 72 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும்.