உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 877 காளைகளும், 345 காளையர்களும் களமிறங்கப்பட்டு, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
பாலமேட்டில் வாடிவாசல் திறக்கப்பட்டதும் முடிந்தால் தொட்டுப் பார் என்ற தீரத்துடன் திமிலை சிலிர்த்துக் கொண்டு துள்ளிக் குதித்த காளைகளை தங்களது வீரத்தாலும், நுணுக்கங்களாலும் காளையர்கள் கட்டுப்படுத்தினர். வீரத்தை வெளிப்படுத்தி பெற்ற வெற்றிக்கு உடனுக்குடன் தங்கக் காசு, லேப்டாப், குக்கர், டிவி, பிரிட்ஜ், கட்டில் மெத்தை, சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியில் சுவாரசியமாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி தீபா, கருப்பன் என்ற காளையை களமிறக்கி, விசில் அடித்து உற்சாகப்படுத்தி வெற்றிப் பெற வைத்தார்.
மற்றொரு மாணவி இறக்கிய காளை பிடிபட்டதால் அவர் மைதானத்திலேயே கண்ணீரை சிந்தினார்.
ஆனால், தனியொரு ஆளாக காளையை களமிறக்கி, கயிற்றை சுற்றி உற்சாகமூட்டிய மாணவி அன்னலட்சுமிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி புதுக்கோட்டை காளை களமிறக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில், களம் கண்டது போன்ற போட்டாவையாவது எடுத்து விட வேண்டுமென்ற ஆவலில் ஆள்மாறாட்டம் செய்த 15 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
வீரங்கள் மோதும் போட்டியில் காயங்களும், உயிரிழப்பும் தவிர்க்க முடியாததே. பாலமேட்டைச் சேர்ந்த 24 வயதான கட்டிட தொழிலாளி அரவிந்தராஜ் 9 காளைகளை அடக்கி, 3வது இடத்தில் இருந்த நிலையில் மாடு வயிற்றில் குத்தியதில் மரணம் அடைந்தார். காவலர்கள், வீரர்கள் உள்பட 31 பேர் காயம் அடைந்தனர்.
போட்டியில், 23 காளைகளை அடக்கி மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் தமிழரசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட நிசான் காரை வென்றார்.
19 காளைகளை அடக்கி பாலமேடு மணிகண்டன் 2வது இடமும், பாலமேடு ராஜா 15 காளைகளை அடக்கி 3வது இடத்தையும் பிடித்தனர். வீரர்களுக்கு சைன் பைக், பசு மாடு பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான தேர்வில் ரங்கராஜபுரம் கருப்பன் காளைக்கு எக்ஸ்எல் மொபட்டும், திண்டுக்கல் ரமேஷின் துருவன் காளைக்கு, கன்றுடன் பசுவும் பரிசாக வழங்கப்பட்டது.