விருத்தாசலம்: புதுக்கோட்டை வேங்கை வயல்சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக ஆக்குகின்ற முறையில் விசாரணை நடக்கிறதா? என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கட்சிப் பிரமுகர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: புதுக்கோட்டை மாவட்டம்வேங்கைவயலில் நடந்திருக்கின்ற சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பெருத்த அவமானம்.
அந்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றுவற்புறுத்தி வரும் சூழ்நிலையில், தமிழக முதல்வர், ‘விரைவாககுற்றவாளிகளை கண்டுபிடிப்போம்’ என்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அது வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல் அதனை நிறைவேற்றித் தர வேண்டும். விசாரணை மேற்கொண்டு இருக்கின்ற காவல்துறையினர் மீதும், இந்த விசாரணையின் மீதும் பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகின்றன.
தலித் மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு அங்கு குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அந்த தலித் மக்களையே குற்றவாளியாக ஆக்குகின்ற முறையில் அந்த விசாரணையின் போக்கு இருப்பதாக செய்தி வருகிறது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. முறையான விசாரணை இல்லாமல், உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடிய நோக்கத்தோடு அந்த விசாரணை நடைபெறக் கூடாது.
தமிழக முதல்வர், தேவையானால் அந்த விசாரணைக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அதிகாரிகளை மாற்றி, தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் முறையான பயிற்சி பெறாமல் மருத்துவப் பட்டம் பெறாதவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபடுவதாகவும் சட்ட விரோதமாக கருக் கலைப்பு பணியில் ஈடுபடுவதாகவும் தகவல் வருகிறது.
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பூர் பகுதியில் சட்ட விரோதமாக பனைமரம் வெட்டியவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.