எத்தனையோ பழவகைகள் உள்ளன. தமிழகத்தில் அவற்றில் சிறந்தவையாகக் கருதப்படுவது மா, பலா, வாழைப் பழங்களாகும். இவை முக்கனிகள் என அழைக்கப்படுகிறது. இந்த மூன்று பழங்களில் மாம்பழம் மே முதல் செப்டெம்பர் வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும் கிடைக்கிறது. பலா ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில்தான் கிடைக்கிறது. ஆனால் வாழைப் பழம் ஒன்றுதான் வருடம் முழுவதும் மக்களின் பசியாற்றுகிறது. இது மட்டும் அல்ல முக்கனிகளில் வாழைப் பழமே மலிவானது.
மாம்பழம் சாப்பிடத் தோலை நீக்க வேண்டும். அதற்கு ஒரு கத்தி வேண்டும். மேலும் பழுத்த பலாப் பழத்தை வெட்டி எடுத்துச் சாப்பிடுவது அவ்வளவு எளிதல்ல. பலாப் பழம் வெட்டி எடுக்க நிறையப் பொறுமை மட்டும் அல்ல அனுபவமும் வேண்டும். இல்லை என்றால் பலாப்பழம் சாப்பிட முடியாது. ஆனால் வாழைப்பழம் அப்படி அல்ல. வாழைப்பழத்தை உரித்து சாப்பிடுவதுவும் மிக எளிது.. எனவே முக்கனிகளில் சிறந்தது வாழைப்பழமே எனலாம்.

வாழையின் தாயகம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் என நம்பப்படுகிறது. ஆனால் இன்று 150 நாடுகளுக்கும் மேலாக வாழைப்பயிரிடப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேலான வாழை இனங்கள் உள்ளன. பண்புகளின் அடிப்படையில் இவற்றை 50 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றில் சுமார் 30 வாழை இனங்களே வர்த்தக அடிப்படையில் உலகமெங்கும் பயிரிடப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டி என்ற வாழைப்பழ வகை புகழ் பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் பூவிலாச் செண்டு என்ற வாழைப் பழம் மக்கள் மனதில் இடம்பிடித்தது. இதனை பூலாச்செண்டு என அழைப்பது வழக்கம். பழத்தின் உருவம் மற்றும் சுவையில் மட்டி மற்றும் பூவிலாச் செண்டு வகைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். ஆனால் பூவிலாச் செண்டு சற்று நறுமண மிக்கது. செவ்வாழை பழம் தன் நிறத்தால் மற்றும் தனித்துவ சுவையால் புகழ் பெற்றது.

உலகத்தில் மிகப் பெரிய வாழை மரம் பாப்புவா நியூகெனியா என்ற நாட்டில் உள்ளது. இந்த நாடு இந்தோனேசியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ளது. இந்த வாழையை ஆங்கிலத்தில் மூசா இன்ஜென்ஸ் (Musa ingens) என்று அழைக்கிறார்கள்.

இவை 1000 முதல் 2000 மீட்டர் உயரமான அடர்ந்த மலைப் பகுதியில் காணப்படுகிறது. அதனால் இதனைக் காட்டு வாழை எனவும் அழைக்கின்றனர். இந்த வாழை மரம் 70 அடி வரை வரக்கூடியது. கிட்டதட்ட ஒரு தென்னைமரம் உயரத்திற்கு இந்த வாழைமரம் வளரும். இந்த மரத்தின் அடிப்பகுதியின் குறுக்கு வெட்டு நீளம் 7 அடிக்கும் மேலாக இருக்கும். இலை 16 அடி நீளத்துடன் 3 அடி அகலம் வரை வளரக்கூடியது. அங்குள்ள மக்கள் இந்த வாழை இலையைக் தற்காலிக குடிசைகள் அமைக்கப் பயன்படுத்துகிறார்கள்.
பொதுவாக ஒரு வாழைக்குலையில் 10 சீப்புகள் இருக்கும். ஒரு சீப்பில் சுமார் 10 லிருந்து 20 பழங்கள் இருக்கும். ஆக, ஒரு வாழைக்குலையில் சுமார் 200 வாழைப் பழங்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது.
பழுத்த இந்த காட்டு வாழைப்பழம் ஒரு பிறந்த குழந்தை அளவிற்குப் பெரிதாக இருக்குமாம். பிறந்த குழந்தை சுமார் மூன்று கிலோ எடையிருக்கும்! ஒரு வாழைப்பழம் இந்த அளவிலிருந்தால் அந்த வாழைக்குலை எவ்வளவு பெரிதாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள். ஒரு வாழைப்பழம் வாங்கினால் ஒரு குடும்பம் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட முடியும் !!

இந்த காட்டு வாழை இனம் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாப்புவா நியூகெனியா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இருப்பினும் பாப்புவா நியூ கெனியா நாட்டில்தான் மிகப் பெரிய காட்டு வாழை இனம் உள்ளது. இந்த காட்டு வாழை பலன்தர சுமார் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இதனைச் சாகுபடி செய்யமுடியவில்லை. காட்டுப்பகுதியில் மட்டுமே இயற்கையாக வளர்ந்து பலனளிக்கிறது ! இதனைப் பயிரிட்டு விவசாயம் செய்யமுடியவில்லை. வாழை வகைகளில் இது அதிசயமானதுதான் !
நம் ஊரில் நேந்திரம் என்ற ஒரு வாழை இனம் உள்ளது. இதனை நேந்திரம் அல்லது ஏத்தம் பழம் என அழைப்பார்கள். இந்த வகை வாழைக்காயைக் கொண்டுதான் சிப்ஸ் செய்கின்றனர். இது நம் ஊரில் கிடைக்கும் மற்ற வாழைப் பழங்களை விடப் பெரிதாக மட்டும் அல்ல நீளமாக இருக்கும். ஆனால் இதன் வாழைக்குலையில் அதிக எண்ணிக்கையில் பழங்கள் இருக்காது ! இந்த நேத்திர வாழை மாதிரியே ஒரு அபூர்வ வாழை நம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படுகிறது. இந்த வாழையை ஒற்றை மூங்கிலி என அழைக்கின்றனர். வழக்கமாக வாழை மரங்கள் ஒரு குலை வாழைப்பழங்களை ஈன்றெடுக்கும். ஆனால் காடுகளில் காணப்படும் இந்த ஒற்றை மூங்கிலி வாழை ஒரே ஒரு வாழைப் பழத்தையே ஈன்றெடுக்கிறன.

இந்த வாழைப்பழம் அளவில் மிகப் பெரியது. மற்றும் அபூர்வமானது. வாழை மரத்தில் வாழைத்தாரைப் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு இந்த ஒரு வாழைப் பழம் மரத்தில் தொங்குவதைப் பார்க்க அதிசயமாகத்தான் இருக்கும்.
காடுகளில் இயற்கையாக வளர்ந்து பலனளித்த இந்த வாழைப் பழத்தைக் காணி மக்கள் அறுவடை செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேனியல் ஊரில், முன்னாள் வன அலுவலர் இராமதாஸ் இருக்கிறார். இவர் நம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை நன்கு அறிந்தவர். பல நாடுகளுக்கு சென்று காடுகளை பார்த்து படித்து அனுபவப்பட்டவர்.
இவர் இந்த பழம் அபூர்வமானது எனவும்; மன்னராட்சி காலத்தில் காணிமக்கள் திருவாங்கூர் மன்னனுக்கு இந்த பழத்தைப் பரிசளிப்பதுண்டு எனவும்; தன் தாத்தா இந்த அபூர்வ வகை வகை வாழைப் பழத்தை காட்சிப்படுத்தி தங்க மோதிரம் பரிசும் பெற்றார் எனவும் பெருமையுடன் கூறினார். இவர் இந்த வாழை மரத்தை தன் தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.
உயிர் தொழில்நுட்பத்துப் பேராசிரியரான நான் இந்த வாழை இயற்கையாக மரபியல் மாற்றம் அடைந்த நேத்திர இனத்தைச் சார்ந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன். காரணம் உருவத்தில் இந்த பழம் கிட்டதட்ட நேத்திர பழம் மாதிரியே தெரிகிறது.

முன்னாள் வன அதிகாரி.
எரேனியல்,
கன்னியாகுமரி மாவட்டம்
ஒரு சில இவ்வகை வாழை மரங்கள் இரண்டு மூன்று பழங்களுடனும் காணப் படுகின்றன!ஈஸ்வர மூர்த்தி இராமசாமி, இவருக்குச் சொந்த ஊர் கோபிசெட்டிபாளையம். இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் CAS தாவரவியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது சொந்த ஊரில் நிம்மதியாக விவசாயம் செய்து வருகிறார். இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாணிப்புதூரில் ஒரு அதிசய வாழைத்தாரைப் பார்த்துள்ளார். இந்த வாழைத்தாரில் சரிபாதி செவ்வாழைப் பழமும் அடுத்த பாதி பச்சை வண்ண வாழைப் பழங்களும் இருந்தது.

ஆச்சரியம் இத்துடன் நிற்கவில்லை. இந்த வாழைத்தாரின் தண்டுப் பகுதியும் பாதி பச்சை நிறமாகவும் அடுத்த பாதி செந்நிறத்திலும் இருந்தது. வாழையின் பச்சை நிறத்திற்கு குளோரோபில் என்ற பச்சையமே காரணம். செவ்வாழைப் பழ செந்நிறம் அந்ரோசயனின் என்ற ஒரு செந்நிற நிறமியால் வந்தது. திடீர் மாற்றத்தால் இந்த நிறமி உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பாகவும் இருக்கலாம். என் பார்வையில் இரு வேறு வாழை இனங்கள் ஒன்றாக இணைந்து ஒரு புதிய இனத்தை உருவாக்கியுள்ளது என நினைக்கிறேன். காரணம் இந்த வாழைத்தாரில் பச்சை மாற்றும் செந்நிற பழங்களின் உருவம் ஒன்றாக இல்லை. பச்சைப் பழங்கள் பெரும்பாலும் நேராகவும் செந்நிற பழங்கள் சற்று வளைந்தும் காணப்படுகிறது. உண்மை அறிய நீண்ட ஆய்வு தேவை. இவ்வாறாக வாழை பல விந்தைகளைக் கொண்ட தாவரமாகத் திகழ்கிறது. பழவகைகளில் ஏழை பணக்காரர் என அனைவருக்கும் ஏற்றது வாழைப் பழமே!