பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் தமிழர்களின் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக மதுரையின் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.
நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்துமுடிந்த நிலையில், இன்று மாட்டுப் பொங்கலையொட்டி பாலமேட்டில் போட்டி நடைபெறவிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்துவதே பாலமேடு ஜல்லிக்கட்டின் சிறப்பு.
காலை 8 மணிமுதல் தொடங்வுள்ள இந்த போட்டியில் 335 மாடுபிடி வீரர்களும், 800க்கும் அதிகமான காளைகளும் பங்கேற்கவுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்காக 260 பேர் கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள் என 160 பேர் கொண்ட மருத்துவ குழு, 6 மொபைல் மருத்துவ குழு, பதினைந்து 108 ஆம்புலன்ஸ், 60 கால்நடை மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என பல்வேறு துறைசார்ந்த குழுக்கள் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போட்டி தொடங்கிய பின்னர் ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம் 45 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு சுற்று என்கிற வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது சிறப்பாக நடைபெறவுள்ளது.
போட்டி தொடங்கியவுடன் முதலில் வாடிவாசலிலிருந்து இங்குள்ள கிராமத்து கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்படும். அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கக்கூடாது என்பது இங்கு வழக்கமாக இருக்கிறது. போட்டியில் முதலிடம் பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசும், சிறந்த காளைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் பைக் பரிசாக வழங்கப்படவுள்ளன. இதுதவிர சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் காளைகளுக்கு கார், பைக், சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வகையாக பரிசுகளும் காத்திருக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM