நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில், அரச செலவீனங்களை முகாமைத்துவம் செய்வதற்காக, அரசாங்க ஊழியர்களின் சம்பளம் வழங்கும் நடைமுறையில் மாற்றத்தை கொண்டுவருவதற்கென ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ,அதன்படி, நிறைவேற்று அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய தினத்தில் வழங்கவும், நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை உரிய தினத்தில் இருந்து சில தினங்களுக்கு பின்னர் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே இது குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமூர்த்திக் கொடுப்பனவு, உரம், மருந்து வகை என்பவற்றை நாம் எப்படியாவது வழங்குவோம். அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.