Kerala Covid Protocals: பொது இடங்களில் மக்கள் மூக்கு மற்றும் வாயை மூடும் வகையில் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள அரசு நேற்று அறிவித்துள்ளது. மேலும் அனைத்து வாகனங்களில் செல்வோரும் தங்கள் முகம் மற்றும் மூக்கை மறைக்க வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள், சமூகக் கூட்டங்கள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் அனைவரும் முகமூடியைப் பயன்படுத்தி மூக்கு மற்றும் வாயை மறைக்க வேண்டும்.
அனைவரும் பணியிடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்துங்கள். வாகனங்களில் பயணிக்கும்போதும் மாஸ்க் அணியுங்கள். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜன. 12ஆம் தேதி அன்று கேரள அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளியை உறுதி செய்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
கொரோனா தடுப்பு நெறிமுறையை உறுதி செய்வதோடு, வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்வதற்கும், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, கடைகள், திரையரங்குகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அண்டை நாடான சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், இந்தியாவிலும் தொற்று எண்ணிக்கை அதிகமானது. எனவே, கேரளாவிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் 114 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2 ஆயிரத்து 119 பேர் சிகிச்சை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.