பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள முக்குலத்தோர் வாக்குக்களை தட்டி தூக்க சசிகலாவுடன் பாஜக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இரு பிரிவாக பிரிந்து கிடக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக
சசிகலா
தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. முதலாவது, ஆளுநர் ரவி அரசியல் செய்து வருவதாகவும், சட்டசபையில் அவரது உரை குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித் சசிகலா, ஆளுநர் உரை குறித்து ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நான் பார்த்து இருக்கிறேன்.
அரசு தயாரித்த உரையின் நகலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் ஏதாவது திருத்தம் இருந்தால் ஆளுநர் செய்து அனுப்புவார். அதற்கு பிறகு இரண்டாவது முறையாக உரையின் நகல் அனுப்பி வைக்கப்படும். ஆனால், ஆளுநர் ரவி விவகாரத்தில் இப்படி நடந்ததா என்று எனக்கு தெரியாது என்றார்.
மேலும், ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாநில அரசு ஒழுங்காக தர வேண்டும். ஆளுநருடன் சண்டையிட்டு கொண்டே இருந்தால் வாக்களித்த மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாது என்றார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈபிஎஸ்-
ஓபிஎஸ்
உடன் இணைந்து செயல்பட திட்டம் இருக்கா என்ற கேள்விக்கு, நிச்சயமாக உள்ளது என்று கூறிய சசிகலா திமுகவை வீழ்த்த நாங்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பதை குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா, இந்த திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும். பெரும்பான்மை இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்; ஒரு தரப்பில் ஆதரவு தெரிவித்துவிட்டால் போதாது என்றார்.
மேலும், ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது அதிமுக ஆட்சிதான். ஆனால், அதிலும் திமுக அரசியல் செய்து வருகிறது. சுதந்திரமாக நடந்து வந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முழுவதுமாக திமுக அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது என சசிகலா கூறினார்.
பாஜகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு அவரை பிரச்சாரம் செய்ய வைத்து முக்குலத்து வாக்குகளை பெற திட்டமிட்டு வருகிறதாம் பாஜக. இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சசிகலாவிடம் உடன்பாடு எட்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு சுப்ரமணியசாமியை அனுப்பி பேசி பார்க்க பாஜக திட்டமிட்டு வருகிறதாம்.