குத்துச்சண்டையில், போராடி வென்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசி எறிந்த முகமது அலியின் பிறந்தநாள் இன்று. ஏன் இந்த கோபம் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லூயிவில் நகரில் 1942ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி பிறந்தார் பின்னாளில் முகமது அலி என்றழைக்கப்பட்ட காஸ்சியஸ் மர்செல்லஸ் கிளே. குத்துச் சண்டை மீதான தீராத காதலால் ஓவியரான தந்தையின் வறுமையையும் மீறி தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
பள்ளிக்குச் செல்ல போதிய பணம் இல்லாததால், பேருந்தின் வேகத்திற்கு இணையாக ஓடுவதையே பயிற்சியாக்கிக் கொண்டார். இப்போது, சமத்துவம் பேசும் அன்றைய அமெரிக்காவின் நிலையே வேறு மாதிரியாக இருந்தது.
வெள்ளையர்கள் அதிகம் வாழும் பகுதிக்குள் கறுப்பர்கள் நுழையவே முடியாது. மீறி நுழைந்தால் விரட்டியடிக்கப்படும் காலத்தில் பல அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் தாங்கியே முன்னேறி வந்தார் முகமது அலி.
1960ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் லைட் வெயிட் பிரிவில் தங்கம் வென்று நாடு திரும்பிய கிளேயை, லூயிவில் நகரம் கறுப்பராகவே பார்த்தது.
தான் பெற்ற ஒலிம்பிக் பதக்கத்துடன் ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றவரை கறுப்பர் என்பதற்காக வெளியே அனுப்பியதோடு, அவரை கொலை செய்யவும் ஒரு கும்பல் துரத்தியதால் விரக்தியடைந்த அவர் தனது பதக்கத்தை அங்குள்ள ஆற்றில் வீசி எறிந்தார்.
பின்னர், இஸ்லாமை தழுவி முகமது அலியாக மாறிய அவர், தொழில்முறை போட்டிகளில் கவனம் செலுத்தி தான் சந்தித்த 61 போட்டியாளர்களில் 56 பேரை வெற்றிக் கொண்டு 3 முறை ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
தனது 74 வயதில் இறந்த முகமது அலி “தான் பெற்ற அவமானங்களே தன்னை உயர்த்தியது” என்று கூறிய வார்த்தை இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.