ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் தேதி தமிழர் திருநாளான தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று உழவுக்கு அடித்தளமாக விளங்கும் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீட்டில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து படையல் போட்டு கொண்டாடி குடும்பத்துடன் அமர்ந்து அசைவ உணவு சமைத்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இதையடுத்து, தைமாதம் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு இன்று கடற்கரை பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் குடும்பத்தினருடன் சென்று உற்சாகமாக நேரத்தை செலவிட்டு செல்வார்கள்.
ஆகவே அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு போலீசார் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காணும் பொங்கலை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், சென்னையில் மாமல்லபுரம், கோவளம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.