இந்தியாவிலேயே சிறுமிகள் பலாத்கார வழக்குகளில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்கல் முதல் 3 இடங்களில் உள்ளது என ராஜஸ்தான் டிஜிபி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஷ்ரா செய்தியாளர்களிடம் பேசும்போது, “ராஜஸ்தானில் பதிவு செய்யப்படும் 41 சதவீத பலாத்கார வழக்குகள் பொய்யானவை. உண்மையில் பாலியல் பலாத்கார வழக்குகள் எண்ணிக்கையில் மத்திய பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 2-வது இடத்திலேயே உள்ளது. அதுவும் தொடர்ச்சியாக வழக்குகளை பதிவு செய்வதனாலேயே இந்த 2-வது இடத்தில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் குறைவான பலாத்கார வழக்குகள் காணப்படுவதற்கான காரணம், அவர்கள் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய தவறி விடுகின்றனர். குறைவான குற்றச் செயல்களால் அல்ல. இதேபோன்று, பலாத்காரம் போன்ற தீவிர விசயங்களில் பிற மாநிலங்களும் வழக்குகளை பதிவதில்லை. அதற்கு மாறாக, புகாராக பெற்று அவர்கள் விசாரணையை தொடங்கி விடுகின்றனர். பலமுறை இதன் பலனை குற்றவாளிகள் பெற்று விடுகின்றனர். அது பல முக்கிய சான்றுகளை அழிப்பதற்கான ஆபத்து உள்ளது.
ராஜஸ்தானில் பலாத்கார வழக்குகளை பதிவு செய்ய காலதாமதம் செய்யக் கூடாது என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொய்யான வழக்குப் பதிவு செய்யும்போது, எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு, பொய்யான வழக்கு பதிவு செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2022-ம் ஆண்டில், முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது, பொய் வழக்கு பதிவு செய்வோருக்கு எதிரான நடவடிக்கை 68 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் நிலுவையிலுள்ள பலாத்கார வழக்குகளின் சராசரி எண்ணிக்கை 30 சதவீதம். ஆனால், அது ராஜஸ்தானில் 12 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் தண்டனை அளித்ததற்கான தேசிய சராசரி அளவு 28 சதவீதம். ஆனால், ராஜஸ்தானில் 47.9 சதவீதம். சிறுமிகள் பலாத்கார வழக்குகளில் ராஜஸ்தான் 12-வது இடத்தில் உள்ளது. இதுவே மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் தமிழகம் ஆகியன முதல் 3 இடங்களில் உள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.