சென்னை: சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஜெர்மன், ஜப்பான் உட்பட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஜெர்மனியின் ‘பிராங்பேர்ட்’ சர்வதேச புத்தகக் காட்சி 1949-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவே உலகின் பெரிய புத்தகக் காட்சியாக விளங்குகிறது. அதேபோல், தமிழகத்திலும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.
அதன்படி நூலகத் துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில், சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சர்வதேச புத்தகக் காட்சியை நேற்று தொடங்கி வைத்தார்.
இதில், அமெரிக்கா, மலேசியா, துருக்கி, இந்தோனேசியா, தான்சானியா உள்ளிட்ட 30 வெளிநாடுகளின் அரங்குகள் உட்பட 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அந்தந்த நாடுகளின் புகழ்பெற்ற நூல்கள் இடம் பெற்றுள்ளன.
‘தமிழ் முற்றம்’ என்ற பெயரில் உள்ள அரங்குகளில் தமிழகத்தின் பிரபலமான புத்தகங்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்காட்சியில் பிரம்மாண்ட திருக்குறள் புத்தகம் நுழைவுவாயில் அருகே இடம் பெற்றுள்ளது. அதில் 106 திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்கள் தமிழ், பிற மொழிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கலந்துரையாட பிரத்யேக அரங்கமும் சர்வதேச புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது; உலகின் பழமையான மொழி தமிழ். அதன் சிறப்பை உலக அரங்கில் கொண்டு செல்வது அவசியமாகும். அதற்கு இந்த புத்தகக் காட்சி உதவிகரமாக இருக்கும். மேலும், அறிவுப் புரட்சியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த புத்தகக் காட்சி 18-ம் தேதி (நாளை) வரை நடைபெறும். நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன என்றார்.
இந்நிகழ்வில் ஜெர்மன் தூதர் ஜாக்குலின் ஹீதே, ஜப்பான் தூதர் டகா மசாயுகி, மலேசியா துணைத்தூதர் சங்கீதா பாலசந்திரா, சிங்கப்பூர் தூதர் எட்கர் பங், தாய்லாந்து தூதர் நிடிரூகே போன்பிரசர்ட், தமிழக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, மேலாண்மை இயக்குநர் ஆர்.கஜலட்சுமி, நூலகத் துறை இயக்குநர் க.இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: இந்த புத்தகக் காட்சி வெளிநாடுகளின் புத்தகங்களையும், தமிழகத்தின் நூல்களையும் நாடுகளுக்கு இடையே விற்பனை செய்து கொள்வதற்கான தளமாகும். தமிழ் இலக்கியங்களை உலக அளவில் எடுத்து செல்லவும், மற்ற நாடுகளில் உள்ள புத்தகங்களை இங்கே கொண்டு வரவும் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும். இதற்காக ரூ.1.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 100 புத்தகங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்றடைந்துள்ளன. இந்த புத்தகக் காட்சியின் மூலம் 50 நூல்களாவது மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், மற்ற நாடுகளின் நூல்களும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சர்வதேச புத்தகக் காட்சி தினமும் காலை 10 முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இதைப் பார்வையிட மாலை 4 முதல் 7 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.