சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் தமிழ் மற்றும் தமிழர் நலனுக்காக தொண்டாற்றிய 10 அறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் 10 பேருக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட் டத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து, 2022-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதை சி.நா.மீ.உபயதுல்லாவுக்கும், பெருந்தலைவர் காமராஜர் விருதை ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கும், மகாகவி பாரதியார் விருதை ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதை வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க. விருதை நாமக்கல் பொ.வேல்சாமிக்கும், கி.ஆ.பெ.விசுவநாதம் விருதை கவிஞர் மு.மேத்தாவுக்கும் வழங்கினார்.
மேலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் தேவநேயப்பாவாணர் விருதை இரா.மதிவாணனுக்கு வழங்கினார். விருதாளர்களுக்கு விருது தொகையாக தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதை கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2022-ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருதை எஸ்.வி.ராஜதுரைக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ.5 லட்சம், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏக்கள் நா.எழிலன், த.வேலு, தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை செயலர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.