நாணயத்தாள்களை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக  அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

சமகால அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக  நாணயத்தாள்களை அச்சிடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக  வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ,அமைச்சரவை  பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: இந்த சந்தர்ப்பத்தில் எம்மால் கடனை பெற்றுக்கொள்ள முடியாது. வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்துவது தொடர்பில் கடன் மறுசீரமைப்புக்கான நடவவடிக்கையை மேற்கொள்ளுமாறு இந்த நாடுகளிடம் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம். இதனால் மேலும் கடன் வாங்க முடியாது. பணத்தை அச்சடிக்க முடியாது. நாணயத்தாள்களை அச்சடித்தால் எதிர்காலத்தில் கடனை பெற்றுக்கொள்ள முடியாது.  திருப்பிச் செலுத்தப்படாத கடனுக்காக நாணயத்தாள்களை அச்சிடுவதை அரசாங்கம் கொள்கை ரீதியில் நிறுத்தி இருப்பதாக அமைச்சர் கூறினார்.
 
இதனால் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாத பெரும் நெருக்கடிநிலை எதிர் நோக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
டிசம்பர் மாதத்தில் செலவுகள் எவ்வாறு சமாளிக்கப்பட்டது என்பதை நிதி அமைச்சின் செயலாளரிடம் வினாவப்பட்டது. புள்ளிவிபரத் தரவுகளை வழங்குமாறு கோரினோம். அதற்கமைவாக இலங்கைக்கு வரி மற்றும் வரி செலுத்தப்படதா வகையில்  திறைசேரிக்கு 141 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது. இதில் சம்பளத்திற்காக 88 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சிற்கு தேவையான மருந்துகளுக்கு 8.7 பில்லியன். தினசரி பயணச் செலவுகள் போன்ற நிர்வாகச் செலவுகள் 154 பில்லியன் ரூபா.
 
மொத்த வருமானம் 141 பில்லியன் ரூபா. ஆனால் செலவு 154 பில்லியன் ரூபா இதனை சமாளிப்பது எவ்வாறு? மாற்று வழியை கண்டறிவது கடினம்.முகாமைத்தும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் வெகுஜன ஊடக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அசமைச்சரும் அமைச்சவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன மேலும்  தெரிவித்தார்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.