மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் வரும் புலம் பெயர்ந்தவர்களுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை என்று அந்த நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்கள்
பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு வாழ்வாதார நெருக்கடியின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் குடியேற முயற்சித்து வருகின்றனர்.
இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழையும் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் மெக்சிகோ அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
முறையற்ற முறையில் இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழையும் புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக டிரம்பின் குடியரசு கட்சி வலுவாக குரல் கொடுத்து வருகிறது.
நியூயார்க் நகரில் இடமில்லை
இந்நிலையில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் புலம் பெயர்ந்தவர்களுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை என்று அந்த நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னறிவிப்பின்றி மெக்சிகோ-அமெரிக்கா எல்லையின் அருகில் அமைந்துள்ள எல் பாசோ நகருக்கு சென்ற நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அங்கிருந்த புலம் பெயர்ந்தவர்களிடம் உரையாற்றினார்.
அந்த உரையில், நியூயார்க் நகரம் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, இதற்கிடையில் நியூயார்க் நகருக்கு அனுப்பப்படும் புலம் பெயர்ந்தவர்களுக்கு புகலிடம் அளித்தால் மாநகராட்சியின் செலவினங்கள் இரண்டு மடங்காகும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டிரம்பின் குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களுக்குள் வரும் புலம்பெயர்ந்தவர்களை பேருந்து மூலம் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியின் அதிகாரத்திற்குள் இருக்கும் மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.