காத்மண்டு,
நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று முன் தினம் காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர்.
அந்த விமானம் காலை 11 மணிக்கு பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. பொக்காரா புதிய விமான நிலையம் கடந்த 1-ந்தேதி தான் திறந்து வைக்கப்பட்டது. விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேட்டி நதிக்கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த நேரத்தில் மோசமான வானிலையும் நிலவியது. இதற்கிடையே தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதையடுத்து விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. விமான விபத்தில் விமானத்தின் பாகங்கள் எரிந்து ஆங்காங்கே சிதறி காணப்பட்டது. மேலும் அதில் பயணம் செய்த பயணிகளின் உடல்களும் கருகியபடி ஆங்காங்கே காணப்பட்டது. இந்த விமான விபத்தில் 68 பேர் இறந்ததாக முதலில் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.
விமானத்தில் இருந்த 68 பயணிகள், 4 ஊழியர்கள் என 72 பேருமே இறந்து விட்டதாகவும் யாரையும் உயிருடன் மீட்கவில்லை எனவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதற்கிடையே இரவானதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. நேற்று காலையில் மீண்டும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
காலை வரை 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, எஞ்சிய இருவரது உடல்கள் தேடப்பட்டு வந்தது. இந்த நிலையில், 71 பேரின் உடல்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது என்றும் ஒருவரது உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் நேபாள ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.