ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு, பொங்கலையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர் என, வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை அருகே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில், மழை இருக்கும் காலகட்டத்தில் தண்ணீர் அதிகளவு வருவது மட்டுமின்றி, அந்நேரத்தில் அங்கு குளிக்க, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டில் ஜூன் மாதத்திலிருந்து தொடர்ந்து சில மாதமாக பெய்த தென்மேற்கு பருவ மழையின் போது, அருவியில் தண்ணீர் அதிகளவு கொட்டியது.
இதனால், சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகமானது. அதன்பின், அண்மையில் வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்தது. பின், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைவால், கவியருவியில் கடந்த சில வாரமாக தண்ணீர் வரத்து சற்று குறைந்தது. இருப்பினும், ரம்மியமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு சென்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி, நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பணிகள் அதிகம் வந்திருந்தனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
வழக்கத்தைவிட கூட்டம் அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் அனைவரும், அருவியில் முறையாக குளிப்பதற்கு போதிய வழியில்லாமல் தவித்தனர். இருப்பினும் பலரும், வெகுநேரம் காத்திருந்து குளித்தனர். சில சுற்றுலா பயணிகள், அருவியின் ஒருபகுதியில் ஆங்காங்கே வழிந்தோடும் தண்ணீரிலும், குட்டைபோல் தேங்கியிருந்த தண்ணீரிலும் குளித்தனர். கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால், அவர்கள் விதிமீறி அடர்ந்த காட்டு பகுதிக்குள் செல்கின்றார்களா என்று வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை நிறைவடையும் வரை, கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.