மெரினாவில் காணும் பொங்கல்: வெயிட்டான ஏற்பாடு… இந்த வாட்டி பலே பலே!

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக காணும் பொங்கல் தினத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நடப்பாண்டை பொறுத்தவரை கொரோனா அச்சம் இல்லாத காணும் பொங்கலாக மாறியுள்ளது. எனவே சென்னையின் கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களில் மக்கள் குடும்பம், குடும்பமாக படையெடுத்து செல்வர்.

சிறப்பு பேருந்துகள்

பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் உள்ள அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. வெளியூரில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று காலை முதலே பொதுமக்கள் சென்னையை சுற்றி பார்க்க தொடங்கி விட்டனர்.

மெரினாவில் பாதுகாப்பு

எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரிக்கையில், இம்முறை 50 ஆயிரம் பேர் மெரினாவில் குவியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் 15 ஆயிரம் காவலர்கள், ஆயிரம் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு கோபுரங்கள்

கடலில் பொதுமக்கள் இறங்காத வகையில் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் போடப்பட்டுள்ளன. தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். அதுமட்டுமின்றி ட்ரோன்கள் மூலமும் கூட்டத்தை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி பெற்ற காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கட்டுப்பாட்டு அறைகள்

உழைப்பாளர் சிலை, காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 7 ஆம்புலன்ஸ்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மெரினாவில் நிறுத்தப்பட்டுள்ளன. 140 நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். உயர்தர தொழில்நுட்ப கேமராக்கள் 12 இடங்களில் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சோலார் அவுட் போஸ்ட்கள்

கடற்கரை பகுதியில் 16 குதிரைகளில் சிறப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர். மீட்பு பணிக்காக மோட்டார் படகுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. மெரினா, பெசன்ட் நகர் ஆகிய இரண்டு கடற்கரைகளிலும் முதல்முறை சோலார் திறன் பெற்ற அவுட் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறுவர்கள் கையில் டேப்

பெற்றோர்களுடன் வரும் சிறுவர், சிறுமிகள் தொலைந்து போகாமல் தடுக்கவும், அவர்களை மீட்கும் வகையிலும் போலீசார் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். அதாவது, சிறுவர், சிறுமிகளின் கைகளில் பெற்றோர்கள், காவல் உதவி மைய செல்போன் எண்கள் அடங்கிய சிறிய வடிவிலான டேப்பை ஒட்ட முடிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.