Kanum Pongal 2023: காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வது வழக்கம். அந்த வகையில், சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடற்கரை, பூங்காக்கள் போன்ற இடங்களில் காணும் பொங்கல் கொண்டாடத்துக்காக மக்கள் இன்று காலை முதலே வர தொடங்கியுள்ளனர்.
இந்த மக்கள் கூட்டம் மாலை நேரத்தில் கட்டுக்கடங்காத வகையில் நிரம்பி வழியும். அதிலும், சென்னை மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக அதிக கூட்டம் இல்லை. இந்த வருடம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் அதிக அளவு கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குளிக்க தடை
இதேபோன்று மாநகராட்சி பூங்காக்கள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில், மெரினாவில் இன்று பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெரினாவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மெரினாவில் 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து மீட்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக டிரோன்களை இயக்குவதில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 15 ஆயிரம் போலீசாருடன் 1000 ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை, காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.