புதுடெல்லி: ராணுவத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அக்னி வீரர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம்தேதி ‘அக்னிபாதை’ திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய வற்றில் 17.5 வயது முதல் 21 வயது கொண்டவர்கள் சேர்க்கப்படுவர். அவர்கள் பயிற்சி காலத்தையும் சேர்த்து 4 ஆண்டுகள் அக்னி வீரர்களாக முப்படைகளில் பணியாற்றுவர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பீரங்கி படை பயிற்சி மையத்தில் ஜனவரி 1-ம் தேதி 2,600 அக்னி வீரர்களுக்குப் பயிற்சி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதலாவது பிரிவு அக்னி வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தேசத்துக்காக செய்ய வேண்டிய கடமைகள் குறித்து அக்னிவீரர்களுக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக பங்கேற்றார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
திருவள்ளுவருக்கு மரியாதை
திருவள்ளுவர் தினத்தில்,அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நான் நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட திருவள்ளுவரின் கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.
மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறள் நூலைப் படிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். திருக்குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.