திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகிலிருக்கும் ஆலங்குப்பம் பகுதி, தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் தாலுகா போலீஸார் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிறுத்தப்படாமல் மேலும் வேகமாகச் சென்றது. இதனால், பின்தொடர்ந்துச்சென்ற போலீஸார் ஒருக்கட்டத்தில் மடக்கிப் பிடித்து, காரைச் சோதனைக்குஉட்படுத்தினர். காருக்குள் கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததால், காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் காசி என்ற காசிராஜன் (வயது 33) எனத் தெரியவந்தது.
நாமக்கல் மாவட்ட காவல்துறை பதிவேட்டில் மட்டுமே இவர் மீது மூன்று கொலை, கொள்ளை என 14 குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், காசியை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியிருக்கிறது. ஆம்பூர் அருகிலிருக்கும் பெரியகுப்பம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த 2 ஆண்டுகளாக நாமக்கல் காசி பதுங்கியிருந்ததும் தெரியவந்திருக்கிறது.
அவ்வபோது, நாமக்கல் மாவட்டத்துக்குச் சென்று குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு, ஆம்பூரில் உள்ள இந்த வீட்டில் வந்து பதுங்கிக்கொள்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
இவரைப் பற்றி போலீஸார் மேலும் கூறுகையில், ‘‘பிரபல ரௌடி நாமக்கல் காசி சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் வளர்ந்தவர். 2013-ல் ஒரு கொலை வழக்கில் சிக்கியதன் மூலம் அவர் பிரபல ரௌடியாக நாமக்கல் பகுதியில் உருவெடுத்தார்.
அதன்பின்னர், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ‘நாமக்கல் கிங் காசி ராஜன்’ என்ற பெயரில் யூடியூப் சேனலையும் அவரின் அடியாட்கள் தொடங்கி, சமூக வலைதளங்களில் பப்ளிசிட்டி தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, ஒரு லெட்டர் பேடு அரசியல் கட்சியிலும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பதவி, காசிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், தனது ரௌடி சாம்ராஜ்ஜியத்தையும் விரிவாக்கம் செய்ய அவர் முயன்றிருக்கிறார். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட நாமக்கல் காசி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்’’ என்றனர்.