பாட்னா: கடந்த 24 மணிநேரத்தில் தன் மீது இரண்டுமுறை தாக்குதல் முயற்சி நடந்ததாக மத்திய இணையமைச்சர் அஸ்வின் சவுபே திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் அஸ்வின் சவுபே,” விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பக்சரில் நான் உண்ணாவிரதம் இருந்த போது, 5-6 அடி தூரத்தில் சிலர் கைகளில் தடியுடன் என்னை தாக்க ஓடிவந்தனர். அதற்குள்ளாக, எனது பாதுகாவலர்களும் காவல்துறையினரும் அவர்களில் மூன்று பேரை பிடித்து என்னை காப்பாற்றினர். அவர்கள் தடுக்கப்படவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என எனக்குத் தெரியவில்லை
அதுமட்டும் இல்லை, கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் மத்தியில் ஓடினார். போலீசார் அவரைப்பிடிக்க முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
என்னைத் தாக்க வந்த குண்டர்களை போலீஸாரும் அங்கிருந்தவர்களும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பாதுகாப்பு அளித்தனர். அங்கு வந்த போலீஸ் டிஎஸ்பி எங்கள் கட்சித் தொண்டர்கள், எனது உதவியாளரிடம், எந்தப் பிரச்சினையும் இல்லை அமைச்சரை அவரது வேலைகளை கவனிக்கச் சொல்லுங்கள். கைது செய்யப்பட்டவர்கள் அவர்களின் வேலையைச் செய்யட்டும் எனத் தெரிவித்துள்ளார். அதுபோன்றதொரு விஷயத்தை பிஹாரின் டிஎஸ்பியிடமிருந்து கேட்பது துரதிர்ஷ்டவசமானது.
நான் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேட்க விரும்புகிறேன். பிஹாரில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு முறை என்மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தாக்குதல் நடத்தியவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை. யாருடைய அழுத்தின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்”. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு இணையமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற கான்வாய் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பல போலீஸார் காயமடைந்தனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பக்சரில் இருந்து பாட்னா செல்லும் வழியில், கோரன்சாரை காவல்நிலைத்தைச் சேர்ந்த வாகனம் ஒன்று, தும்ராவிலுள்ள மதிலா – நாராயண்பூர் சாலையில் விபத்துக்குள்ளானது. கடவுள் ஸ்ரீராம் புண்ணியத்தில் அனைவரும் நலமாக இருக்கிறார்கள். காயம் அடைந்த காவலர்கள் மற்றும் ஓட்டுநர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நான் அவர்களுடன் தும்ரான் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறேன். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் நானும் அவர்களுடன் செல்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.