புதுடெல்லி: பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் 2023ல் நடைபெறவுள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்ய உழைக்குமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக டெல்லியில் பாஜக பிரம்மாண்ட சாலைப் பேரணியை மேற்கொண்டது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பிரம்மாண்ட வெற்றி பெற்றுத் தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் முதல் நாள் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள், அலுவலக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆற்றிய உரை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர், “வரவிருக்கும் 9 மாநில தேர்தல்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டம் என்று கூறிய ஜெ.பி.நாட்டா, மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும். அதனைக் குறிவைத்து செயல்பட வேண்டும் என்று கட்சியினருக்கு வலியுறுத்தினார்.
இந்த 9 மாநிலங்களில் ஏற்கெனவே 5 மாநிலங்களில் பாஜக இப்போதும் ஆட்சியில் இருக்கிறது. இந்த 9 மாநிலங்களுடன் 10வதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் நடைபெறலாம் என்று கூறிய நட்டா, அதன் மீதும் கவனம் செலுத்த வலியுறுத்தினார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 272 இடங்களைக் கைப்பற்றியது. 2019 தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில் 2024 தேர்தலில் 543 இடங்களில் இன்னும் அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்காக மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 160 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த நட்டா அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி பாஜகவை வலுப்படுத்தி வெற்றி பெறச் செய்ய உழைக்குமாறு வலியுறுத்தினார்.
இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாராம், மொபைல் தயாரிப்பில் இரண்டாவது பெரிய உற்பத்தி சக்தி, கார் உற்பத்தில் மூன்றாவது பெரிய சக்தி. ஜி20 மாநாட்டுக்கு தலைமை ஏற்றுள்ளது. இவ்வாறாக இந்தியா உலக அரங்கில் தன்னை மேம்படுத்தி பளிச்சிட பாஜக ஆட்சியே காரணம் என நட்டா பேசினார்” என்று ரவிசங்கர் பிரசாத் எடுத்துரைத்தார்.