புதுடெல்லி: கடந்த நிதியாண்டில் ஆளும் பாஜ கட்சி ரூ. 1,917 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ரூ. 545 கோடியுடன் திரிணாமுல் காங்கிரஸ் 2ம் இடத்தில் உள்ளது.அரசியல் கட்சிகளின் வரவு செலவு குறித்த ஆண்டறிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதில் பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட 8 தேசிய கட்சிகள் அடங்கும். அதன்படி நன்கொடை வாங்குவதில் ஆளும் பாஜ முதலிடத்தைப் பிடித்துள்ளது. அக்கட்சி கடந்த நிதியாண்டில் பெற்ற நன்கொடை ரூ. 1,917.12 கோடியாகும். அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பெற்ற தொகை ரூ. 1,033.7 கோடி. அக்கட்சியின் செலவினமாக 854.46 கோடி ரூபாய் இருந்துள்ளது.
2020-21ம் ஆண்டில் பாஜவுக்கு கிடைத்த தொகை ரூ. 752 கோடி. அதற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ. 545.7 கோடி கிடைத்தது. காங்கிரஸ் ரூ. 541 கோடி நன்கொடை பெற்றது. அதன் செலவு கணக்கு ரூ. 400 கோடியாக இருந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 162.2 கோடி கிடைத்துள்ளது. என்சிபி கட்சிக்கு 2020-21ம் ஆண்டில் வசூல் ரூ. 34 கோடியாக இருந்தது. தற்போது ரூ. 75.8 கோடியாக அதிகரித்துள்ளது. மாயாவதியின் பிஎஸ்பி கட்சியின் வசூல் ரூ. 52.4 கோடியில் இருந்து ரூ. 43.7 கோடியாக குறைந்துள்ளது.