இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் கடும் பீதி

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு மலுகு மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள டோபெலோ நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கம் டோபெலோ மற்றும் அதனை சுற்றியுள்ள பல நகரங்களை உலுக்கியது. நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் கடும் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

எனினும் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதும், இதில் 330-க்கும் அதிகமானோர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.