திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை காலை நடை சாத்தப்படுகிறது. இன்று இரவு வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. கடந்த 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் முடிவடைந்த பின்னரும் பக்தர்களின் வருகை குறையாமல் உள்ளது. இதற்கிடையே 14ம் தேதிக்குப் பின்னர் கடந்த 3 தினங்களாக சராசரியாக 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்கலாம் என்பதால் பக்தர்கள் சபரிமலையில் அதிக அளவில் குவிந்திருந்தனர். இந்த மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் நாளை காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் இந்த வருடத்துக்கான மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.