ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிச்சதும் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அண்ணாமலை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி 27 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்” என்ற அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவில், பாஜக எம்எல்ஏவும், அக்கட்சியின் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினருமான டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் v.c.வேதானந்தம், பாஜக ஈரோடு மாவட்ட செயலாளர்களான விவேகானந்தன், விஸ்வா பாலாஜி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி எப்போது அறிவி்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தலைநகர் டெல்லியில் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் எனவும், பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 8 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், பிப்ரவரி 10ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் எனவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் மீண்டும் இத்தொகுதி அக்கட்சிக்கே வழங்கப்படும் என தெரிகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் அணி என அதிமுக இரண்டுபட்டுள்ளதால் அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு இரண்டு அணிகளின் சார்பிலும் தனித்தனியாக வேட்பாளர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் என்பதாலும், ஈரோடு கிழக்கு தொகுதி கொங்கு மண்டத்தில் வருவதாலும் பாஜகவும் இங்கு தனித்து களம்காணும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.