கீவ், உக்ரைனில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 18 பேர் பலியாகினர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா நடத்தி வரும் தாக்கு தல், ஓராண்டை எட்டி வரும் சூழலில், இரு தரப்பினருக்குமான போர் நாளுக்கு நாள் தீவிரம்அடைந்து வருகிறது.
ரஷ்யாவின் தொடர் தாக்குதலில் ஏராளமான உயிர் சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், போர் தொடர்பான அவசர பணிக்காக, உக்ரைனின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, இணை அமைச்சர் எவ்கெனி எனின் மற்றும் அதிகாரிகள் நேற்று ஹெலிகாப்டரில் சென்றனர்.
தலைநகர் கீவ் அருகே ப்ரோவெரி பகுதியில் பறந்து சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மழலையர் பள்ளி கட்டடம் மீது விழுந்து, தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
இதில், டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, எவ்கெனி மற்றும் பள்ளி குழந்தைகள் இருவர் உட்பட 18 பேர் உடல் கருகி பலியாகினர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதல்கட்ட விசாரணையில், பைலட்டின் தவறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும், உள்துறை அமைச்சர் பலியாகியுள்ளதால், விசாரணையை தீவிரப்படுத்த உக்ரைன் அரசு முடிவு செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement