சென்னை மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது கூட்டத்தில் காணாமல் போன 17 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது குறித்து சென்னை மாநகர காவல் துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “காணும் பொங்கலை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
குறிப்பாக, உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் இரு தற்காலிக கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டு, கடற்கரையில் நிகழும் நிகழ்வுகள், தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.
மணற்பரப்பில் செல்லக்கூடிய All Terrain Vehicle ஜிப்சி ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து சுற்றி வரப்பட்டும், ஒலி பெருக்கிகள் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டும், குற்றவாளிகள் கண்காணித்து, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டது.
மேலும், டிரோன் கேமராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்து, கடற்கரை மணற்பரப்பில் குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜன.17) அண்ணா சதுக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை மணற்பரப்பில் கூட்டத்தில் காணாமல் போன 14 குழந்தைகள் மற்றும் மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை மணற்பரப்பில் கூட்டத்தில் காணாமல் போன 3 குழந்தைகள் என மொத்தம் 17 குழந்தைகள் மீட்கப்பட்டு, மேற்படி கட்டுப்பாட்டறை மற்றும் தற்காலிக காவல் உதவி மையங்கள் மூலம் பெற்றோர் மற்றும் உரியவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் கடற்கரை மணற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.