சென்னை: கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரிக்கும் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் – தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 09.01.2023 அன்று கையெழுத்தாகியுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட் (Garnet), இலுமினைட் (Ilmenite), ஜிர்கான் (Zircon), ரூட்டைல் (Rutile) போன்ற கனிமங்களை பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு கனிம நிறுவனமும், ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனமும் இணைந்து ஓர் புதிய நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கடலோர கனிமங்களை பிரித்தெடுக்கவும், அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களாக மேம்படுத்தவும், அதன்மூலம் அணுசக்தித் துறைக்கு தேவையான முக்கியமான கனிமங்கள் கிடைக்க செய்வதுடன் பிற தொழில்களுக்கு இதர கனிமங்கள் கிடைக்கப்பெற வாய்ப்பும் உண்டாகும் என தமிழக அரசு கூறியுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை குறிப்பாக கனிம வளங்களைக் கொண்டு அரசின் வருவாயை அதிகரிப்பதில் முகவும் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கொள்கை முடிவு முற்றிலும் தவறான பார்வையாகும். அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதைப்போல கனிம வளங்களை சுற்றுச்சூழல் மாசுபடா வண்ணம் அகழ்ந்தெடுக்கவே முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தேரி மணல் மற்றும் தாது மணலிலிருந்து கனிமங்களைப் பிரித்தெரிடுக்கும் நடைமுறை அதிக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதுவரை பாதுகாப்பான தொழில்நுட்ப செயல்முறைகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
தமிழக அரசு தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவானது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகும். அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேரிக்காடுகள் பார்ப்பதற்குப் பாலைபோலத் தெரிந்தாலும் அது மிகுந்த சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அமைவுகள் ஆகும். தேரி நிலத்தில் உள்ள பொறை மண், மழைக்காலங்களில் தண்ணீரை முழுவதுமாக ஊடுருவச் செய்து உள்வாங்கிக்கொள்கிறது. இதன் காரணமாக அதிகளவில் மழை பெய்தாலும் அவை வழிந்தோடி வீணாகாமல் சேகரிக்கப்படுகிறது. பொறை மண்ணுக்கு அடியில் இருக்கும் காய்ந்த களிமண் பரப்பும் அதற்கு அடியில் இருக்கும் சுண்ணாம்புப் பாறையும் மழைநீரை நிறுத்தி வைத்து தேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்கின்றன.
5152.51 ஹெக்டேர் கொண்ட குதிரைமொழித்தேரியும், 899.08 ஹெக்டேர் கொண்ட சாத்தான்குளம் தேரியும் பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படியான ஒரு சூழல் முக்கியத்தும் வாய்ந்த இடத்தை கனிம வள வருவாய்க்காக சீரழிப்பது வேதனைக்குரியது. கடந்த 2007ம் ஆண்டு இந்த தேரியிலிருந்து டைட்டானியம் டை ஆக்சைடைப் பிரித்தெடுப்பதற்காக டாடா நிறுவனம் செய்த முயற்சி தென் மாவட்ட மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. தற்போது தமிழக அரசின் முயற்சிக்கும் நிச்சயமாக மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.
மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில், தமிழ்நாட்டின் கடற்கரையில் 41% அதாவது 402.94 கிலோமீட்டர் தூரமானது கடலரிப்பிற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பல இடங்கள் கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக குளச்சல், மணவாளக்குறிச்சி, பூந்துறை, மேல்மிடாலம், முருங்கவிளை, புத்தந்துறை ஆகிய இடங்கள் கடும் கடலரிப்பைச் சந்தித்து வருவதாக ஒன்றிய புவி அறிவியல் துறையின் NATIONAL ASSESMENT OF SHORELINE CHANGES ALONG INDIAN COAST அறிக்கை தெரிவிக்கிறது.
காலநிலை மாற்றம் தமிழகத்தின் நிலவமைப்பில் தீவிரமான மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. வரும் ஆண்டுகளில் இந்த நிலை மிகவும் மோசமடையக்கூடும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நம்மால் எவ்வளவு தூரம் இயற்கை அமைவுகளை சிதைக்காமல் பாதுக்காக்க முடியுமோ அதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம். ஆனால், தமிழக அரசின் மேற்கண்ட முடிவு சூழல் பாதுகாப்பிற்கு முற்றிலும் எதிரானதாகும். ஆகவே, தமிழகத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான தேரிப்பகுதி மற்றும் தீவிர கடலரிப்பைச் சந்தித்து வரும் தென்மாவட்ட கடலோரங்களின் இயற்கை அமைவுகளைச் சீரழிக்கும் முயற்சிகளை தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.