கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியின் கடல் பகுதியில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் படுகில் பயணம் செய்து பார்வையிட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை ஒப்புக் காற்றின் காரணமாக சேதம் அடைவதை தடுக்க நான்காண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். அதன்படி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ஒரு கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.
மேலும் இந்த சிலையின் இணைப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய் பனைவெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்று வந்தது. அதன் பிறகு காகித கூழ் கலவை சிலையின் மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடைபெற்று வந்தது.
அது மட்டுமல்லாமல் ஜெர்மனி நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை கொண்டு சிலையின் மீது பூசும் பணி நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.