ஐதராபாத்: கல்லூரி மாணவரை தாக்கிய சம்பவத்தில் தெலங்கானா மாநில பாஜக தலைவர் பாண்டி சஞ்சய்யின் மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தெலங்கானா மாநில பாஜக தலைவரும் எம்பியுமான பாண்டி சஞ்சய்யின் மகன் பகீரத், கல்லூரி மாணவர் ஒருவரை பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதி அறையிலும் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பாண்டி சஞ்சய்யின் மகன் பகீரத் மற்றும் ஒருவர் மீது துண்டிகல் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்:
எம்பியின் மகன் பகீரத் மற்றும் அவரது ஆதரவாளர் ஒருவர் சேர்ந்த மாணவர் ஒருவரை கல்லூரி வளாகத்திலும், விடுதியிலும் தாக்கியுள்ளனர். மாணவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பகீரத் மற்றும் மற்றொருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 341, 323, 504, மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர் தரப்பில் எவ்வித புகாரும் வரவில்லை. கல்லூரி அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.